நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) கூறினார்கள் : ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே (இவை ஹலாலானவையா?, அல்லது ஹராமானவையா? என்ற) சந்தேகத்திற்கிடமான விடயங்களுமுண்டு. அவற்றை மக்களில் அதிகமானோர் அறியாதிருக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்ந்து கொண்டவர் தனது மார்க்கத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பு எடுத்துக் கொண்டுவிட்டார். அதில் விழுந்தவர் ஹராத்தில் விழுந்து விட்டவராவார். அனுமதிக்கப்படாத ஒரு பாதுகாப்பு அரணிற்கருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அவை தடுக்கப்பட்ட அப்பகுதிக்குள் சென்று மேய்ந்து விடக் கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பாளனுக்கு அவர் ஒப்பாகின்றார். ஒவ்வோர் அரசனுக்கும் சொந்தமான ஒரு பாதுகாப்பு அரண் (எல்லை) உண்டு. அல்லாஹ்வின் பாதுகாப்பு அரண் (எல்லை), அவன் அனுமதிக்காத(ஹராமான) காரியங்களாகும்.அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீராகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) கூறுகின்றார்கள் : "விற்றாலும், வாங்கினாலும், கடனை நிறைவேற்றினாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!".