நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்".
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி (ஸல்) அவர்கள் 'முஆதே!'' என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் (ரலி) கூறினார். 'முஆதே!' என்று என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு 'தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள்.இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப்பதற்காக முஆத் (ரலி) அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.
அபூ தர் அல்கிபாரீ (ரலி) கூறுகின்றார்கள் : கண்ணியமிக்க இறைவனிடமிருந்து அறியப் பெற்றதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர்.
எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்போரே. ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன்.
எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது.
எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது.
என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டாலும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை.
எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்".
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள் : "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்".
உமர் (ரலி) கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபி (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும் இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ‘ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்’ என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்” என்பதாக நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் ‘இஹ்ஸான் (உளத்தூய்மை) பற்றி எனக்குச் சொல்லுங்கள்’ என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்” எனச் சொன்னார்கள். பின்னர் அவர் ‘எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்’.பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். நபி (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்கள்.
அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான். ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்து அதை செய்து முடிக்க முடியாவிட்டாலும் அல்லாஹ் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத்து, அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான். ஒருவர் ஒருதீய செயலைச் செய்ய நினைத்து, அதை அவர் செய்யவில்லை என்றால் அல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, அதை செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரு தீய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான். முஸ்லிமின் அறிவிப்பில் : “அல்லாஹ்வின் திட்டப்படி அழியக் கூடியவர் தான் அழிந்து போவார்” என மேலதிக வார்த்தை உள்ளது.
"நிச்சயமாக மார்க்கம் இலகுவானது.மார்க்கம் அழிந்த போகாது.ஆனால் அது மிகைப்படுத்தப் பட்டாலேயன்றி.எனவே அதனை நடு நிலையாகவும்.மிகைப் படுத்தாமலும் செய்து வாருங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.இன்னும் நல்லமல் மூலம் காலையிலும்,மாலையிலும்,இரவின் ஒரு பகுதியலும் உதவி தேடுங்கள்"என்று"ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இதனை இமாம் புஹாரீ அவர்கள் அறிவித்துள்ளார்கள்.மேலும் இன்னொரு அறிவிப்பில் "கருமத்தை நடு நிலையாகச் செய்யுங்கள்.மிகைப் படுத்தாதீர்கள்.காலையிலும்,மாலையிலும்,இன்னும் இரவின் ஒரு பகுதியிலும் அதனை நடு நிலையாகச் செய்யுங்கள்"என்று பதிவாகியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ருகைய்யா தமீம் பின் அவ்ஸ் அத்தாரீ (ரலி) கூறுகின்றார்கள் : "மார்க்கம் என்பது நலவை நாடுதலாகும். யாருக்கு? என நாம் வினவிய போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ், அவனது வேதம், அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர் இன்னும் முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோருக்கு நலவை நாடுதலாகும்".