நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மஃகல் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை".
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன, கோத்திரத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன, கோத்திரத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும். யார் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை".